“தினத்தந்தி” செய்தி எதிரொலி: சின்ன குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதை சீரமைப்பு தடுப்பணை கட்டவும் கலெக்டர் உத்தரவு


“தினத்தந்தி” செய்தி எதிரொலி: சின்ன குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதை சீரமைப்பு தடுப்பணை கட்டவும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 21 July 2018 3:45 AM IST (Updated: 21 July 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக சின்ன குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் தடுப்பணை கட்டவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

நெல்லை, 

“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக சின்ன குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் தடுப்பணை கட்டவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

சின்ன குற்றாலம் அருவி

நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் அருவிகள் தவிர பல்வேறு அருவிகளும் அமைந்துள்ளன. இதில் புளியரை தெற்கு மேடு பகுதியில் தென் பொதிகை மலை அடிவாரத்தில் சின்ன குற்றாலம் அருவியும் ஒன்று. குற்றாலம் மெயின் அருவிபோல் பொங்குமாங் கடலுடன் இந்த அருவி அமைந்திருப்பதால் சின்ன குற்றாலம் என்று பெயர் பெற்றுள்ளது.

தென்மேற்கு பருவமழையின்போது குற்றாலத்தில் தண்ணீர் விழும் காலங்களில் இங்கு சீசன் ஜோராக இருக்கிறது. இதனால் குற்றாலத்தில் இடநெருக்கடியில் குளிக்க விரும்பாத சுற்றுலா பயணிகள் சின்ன குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தற்போதும் அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

“தினத்தந்தி” செய்தி எதிரொலி

இந்த அருவியின் சிறப்பு மற்றும் அருவிக்கு செல்லும் மோசமான பாதை ஆகியவை குறித்தும், அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கடந்த 17-ந்தேதி “தினத்தந்தி” நாளிதழில் செய்தி வெளியானது.

இதை அறிந்த அதிகாரிகள் சின்ன குற்றாலம் அருவிக்கு செல்லும் பாதையின் குறுக்கே மண்டி கிடந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். ஊரக வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்களை அழைத்துச் சென்று பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதையை மூடிக்கிடந்த மூங்கில் மரங்கள் மற்றும் செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

இதனால் புளியரை பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அங்கு குளிக்க வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

இதற்கிடையே நேற்று நெல்லையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புளியரையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை சின்ன குற்றாலம் அருவி தொடர்பாகவும், அங்கிருந்து ஓடும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கலெக்டர் ஷில்பா, 1992-ம் ஆண்டு வெள்ளத்தில் சேதம் அடைந்த தடுப்பணையை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அதற்கு அதிகாரிகள் திட்டமதிப்பீடு தயார் செய்ய உத்தரவிட்டார். மேலும் சின்ன குற்றாலம் அருவிக்கு மக்கள் எளிதாக, சென்று வருவதற்கு தேவையான வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Next Story