அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு


அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2018 11:00 PM GMT (Updated: 20 July 2018 7:29 PM GMT)

சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அரசு பொருட்காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதற்காக போஸ் மைதானத்தில் பல்வேறு துறைகளின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் தனித்தனியாக அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அரங்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

சேலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்படவுள்ள அரசு பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவினை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், விழாக்களில் வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் அரசு பொருட்காட்சியில் அரசின் கொள்கைகள், மேம்பாட்டுத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 27 அரசுத்துறை அரங்குகளும், 11 அரசு சார்பு நிறுவனங்களும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தொடக்க விழாவில் அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது அரசு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அரசு அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரங்கு அமைக்கும் பணிகளை விரைவு படுத்தி தொடக்க நாளுக்கு ஒருநாள் முன்னதாக அரங்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், மாநகராட்சியின் சார்பில் தூய்மை பணியினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், ஆதிதிராவிட நல அலுவலர் அருணாச்சலம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story