திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பனியன் சரக்குகள் தேக்கம் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு


திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பனியன் சரக்குகள் தேக்கம் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 21 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பனியன் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

டீசல், பெட்ரோல் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கு திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து காலையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள லாரிகள் உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைத்தனர்.

இதனால் திருப்பூர் ரெயில்வே கூட்செட் மற்றும் தனியார் லாரி நிறுத்தும் இடங்களிலும் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பிற மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கொண்டுவரப்படும் சரக்குகளும், ரெயில் மூலம் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளும் ரெயில் நிலையத்தில் தேங்கி கிடக்கின்றன. திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏற்றுமதி நிறுவனங்களாக இருந்தாலும், உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களாக இருந்தாலும் பனியன் துணிகளை ரெயில் நிலையம் மற்றும் துறை முகங்கள், விமானநிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டுசெல்வதில் லாரிகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

தற்போது லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பனியன் நிறுவன உரிமையாளர்கள் சரக்குகளை அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். புக்கிங் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அவசரமான உள்நாட்டு ஆர்டர்களை ரெயில்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். ஆனால் குறைந்த அளவு சரக்குகளே ரெயில்கள் மூலம் அனுப்ப முடியும் என்பதால் வர்த்தகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் புக்கிங் அலுவலகங்களில் டன் கணக்கில் பனியன் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகளும் அதிக அளவில் தேங்கியே காணப்படுகிறது.

காங்கேயத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் கொப்பரை ஏற்று செல்லும் லாரிகள் என சுமார் 200–க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது போல வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய் ஏற்றி கொண்டு காங்கேயம் வரும் லாரிகளும் வரவில்லை. அரசி ஆலைகள் அதிகம் இந்த பகுதியில் இருப்பதால் லாரிகள் மூலம் நெல் கொண்டு வருவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.100 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வர்த்தக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story