நெல்லை மாவட்டத்தில் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், வேளாண்மை இணை இயக்குனர் செந்திவேல்முருகன், மாவட்ட திட்ட அலுவலர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 591 ஏக்கர் காரீப் பருவ பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கார் பருவ நெல் சாகுபடிக்கு தேவையான விதைகள், அனைத்து அரசு வேளாண்மை துறை விரிவாக்க மையங்களிலும், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இழப்பீட்டு தொகை
2016-17ம் ஆண்டு நெல், உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், வெங்காயம், பருத்தி மற்றும் மிளகாய் சாகுபடி செய்து பயிர் காப்பீடு செய்த 45,526 விவசாயிகளுக்கு ரூ.94 கோடியே 17 லட்சம் பயிர் இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்று வழங்கப்பட்டு உள்ளது. மானூர் உள்ளிட்ட பகுதிகளில் விடுபட்ட விவசாயிகளுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் விவரங்கள் அளித்து இழப்பீட்டு தொகை பெற முயற்சி எடுக்கப்படுகிறது.
2017-18ம் ஆண்டுக்கான பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் மொத்தம் 64 ஆயிரத்து 570 விவசாயிகள் 55,795 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து உள்ளனர். பயிர் அறுவடை பரிசோதனை முடிவு அடிப்படையில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை விரைவில் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
வாசுதேவநல்லூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.12¾ கோடி பெற்றுத்தர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
காப்பீட்டு நிறுவனம் மாற்றம்
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் குறைந்த தண்ணீரை கொண்டு அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யலாம்.
நடப்பு 2018-19ம் ஆண்டுக்கு கார் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் ஜூலை மாத இறுதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். மற்ற பயிர்களுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந்தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு பதிலாக புதிய காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி விரைவில் நடைபெற இருக்கிறது. அதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் விவசாயிகளும் இந்த பணியில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.
உரம் தட்டுப்பாடு
இதை தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். புளியரை விவசாயி செல்லத்துரை பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக ஸ்பிக் உரம் வரத்து குறைந்துள்ளதால் மற்ற டி.ஏ.பி. உரங்கள் விலை அதிகரித்து உள்ளது” என்றார்.
இதற்கு அதிகாரி விளக்கம் அளிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அதில் இருந்து பாஸ்பாரிக் அமிலம் கிடைப்பதில்லை. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாஸ்பாரிக் அமிலம் விலை அதிகமாக உள்ளது. இதனால் டி.ஏ.பி. உரம் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. குறிப்பிட்ட நிறுவனத்தின் உரம் 300 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டு உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 200 மெட்ரிக் டன் உரம் கொண்டு வரப்படுகிறது. இதனால் உரத்தட்டுப்பாடு ஏற்படாது” என்றார்.
அப்போது ஊத்துமலை பகுதி விவசாயிகள் பாட்டிலில் குடிநீருடன் வந்து, குழாய்களில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரி மீது புகார்
சங்கரன்கோவிலை சேர்ந்த விவசாயி ஒருவர், சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் பயன் அடைவதற்கு தேவையான ஆவணங்களை பெறுவதற்கு முயற்சி செய்த போது சங்கரன்கோவில் தாலுகா அலுவலக அதிகாரி பணம் கேட்பதாக குற்றம் சாட்டினார். இதே போல் கல்குவாரிகளுக்கு அனுமதி பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக குற்றம் சாட்டி பேசினார்கள்.
இதை கலெக்டர் ஷில்பா கண்டித்ததோடு, லஞ்சம் தொடர்பாக விவசாயிகள், பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன்தான் குற்றம் சாட்ட வேண்டும். அவ்வாறு உறுதியான புகாராக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் பொதுவாக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டி பேசக்கூடாது என்றார். இதுதொடர்பாக சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதே போல் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் பேசினார்கள்.
Related Tags :
Next Story