பரங்கிமலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைப்பு
பரங்கிமலை ஜி.எஸ்.டி. சாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பரங்கிமலை ராணுவ தீர்ப்பாயம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து சிக்னல் இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில்வே திட்டப்பணிகள் நடந்தபோது அந்த போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து இணை கமிஷனருக்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதினார். அதில், பரங்கிமலை சிக்னல் மூடப்பட்டதால் ஆலந்தூர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக பரங்கிமலை ராணுவ தீர்ப்பாயத்தின் அருகே போக்குவரத்து சிக்னல் மீண்டும் அமைக்கவேண்டும். இதற்கான நிதியை தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்குவதாக கூறி இருந்தார்.
இதையடுத்து மெட்ரோ ரெயில்வே பணிகளின்போது அகற்றப்பட்ட போக்குவரத்து சிக்னல்களை மீண்டும் அமைக்க மெட்ரோ ரெயில்வே அதிகாரிகளுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் சுதாகர், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் சாமிநாதன் ஆகியோர் கடிதம் எழுதினர்.
அதைதொடர்ந்து பரங்கிமலை ஜி.எஸ்.டி. சாலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்து விட்டால் பரங்கிமலை பகுதிகளில் எந்தவித தடையும் இன்றி போக்குவரத்து சீராக இயங்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story