அமராவதி ஆற்றின் தரைப்பாலத்தில் சிக்கிய ஆகாயதாமரைகள் இளைஞர்கள் அகற்றினர்


அமராவதி ஆற்றின் தரைப்பாலத்தில் சிக்கிய ஆகாயதாமரைகள் இளைஞர்கள் அகற்றினர்
x
தினத்தந்தி 21 July 2018 4:00 AM IST (Updated: 21 July 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ஐந்து ரோடு அருகே அமராவதி ஆற்றின் தரைப்பாலத்தில் சிக்கிய ஆகாயதாமரை செடிகளால் குடியிருப்புக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆற்றுக்குள் இறங்கி அதனை அகற்றினர்.

கரூர்,

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டி உயர்ந்து வருவதால் அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் கரூர் அமராவதி ஆற்றில் பாய்ந்தோடி திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. முன்னதாக ஆறு வறண்டிருந்த போது மண்டியிருந்த செடிகள், குப்பைகள், ஆகாயதாமரை உள்ளிட்டவை தற்போது நீரில் அடித்து வரப்படுகிறது. இந்த நிலையில் கரூர் ஐந்துரோடு அருகே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் தரைப்பாலத்தின் கீழ்புறத்தில் ஆகாயதாமரை செடிகள் பெருமளவு வந்து சிக்கி கொண்டு தேங்கின. இதன் காரணமாக சீறிப்பாய்ந்து வரும் நீர் தடுக்கப்படுவதால் கரையோரமுள்ள குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துவிட வாய்ப்பு இருந்தது. இதையடுத்து அங்குள்ள ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு கையில் கம்புடன் ஆற்றுக்குள் இறங்கினர். தாம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிடுவோமோ? என்கிற அச்சத்தையும் தவிர்த்து ஆற்றின் நடுவே நின்று ஆகாயதாமரை செடிகளை அங்கிருந்து அகற்றினர். அவர்களுடன் சில பெண்களும் சேர்ந்து ஆகாய தாமரைகளை அகற்றியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு அங்கு பசுபதிபாளையம் போலீசார் வந்து கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆகாயதாமரை செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டதால் ஆற்று நீர் தடையின்றி ஓடியது. சமூக அக்கறையுடன் ஆற்றில் ஆகாயதாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன. ஆகாயதாமரை தேங்கி நின்ற இடமானது, கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது கம்பம் விடுவதற்குரிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த இளைஞர்கள் தெரிவிக்கையில், வருடத்தின் 365 நாட்களும் ஏதாவது ஒரு வேளை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. எனினும் நீர் நிலைகளை பராமரிக்க சிறிது நேரம் ஒதுக்கி செயல்பட்டால் தான் விவசாயம் செழிக்கும். தண்ணீர் பிரச்சினை தீரும். குடிமராமத்து என்பதே பண்டைய காலத்தில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு நீர்நிலைகளை பாதுகாக்க மேற்கொண்ட பணிதான். எனவே தற்போதைய சூழலில் அதற்கு அரசும் உதவிபுரிவதால் அனைவரும் குடிமராமத்தில் ஈடுபட முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story