சட்டமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது ஏன்? கவர்னர் கிரண்பெடி கேள்வி
சட்டமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது ஏன்? என கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 27–ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாநில அந்தஸ்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் பொறுவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திக்கும் விதமாக சட்டசபை கூட்டம் கடந்த 19–ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே நிதி ஒதுக்க சட்ட மசோதா தாக்கல் செய்ய கவர்னர் கிரண்பெடி அனுமதி அளிக்காததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கவர்னர் கிரண்பெடி மீது குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டதற்கான காரணம் என்ன என்பதை மக்களிடம் தெரிவிக்கவேண்டும். மக்களும் இதுதொடர்பாக கேட்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.