வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது


வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 21 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் பகுதிகளில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

செங்குன்றம்,

செங்குன்றம் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு டிப்-டாப் உடையணிந்த ஆணும், ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் இருவரும் ராஜ்குமாரிடம் “நீங்கள் வீடு வாடகைக்கு விடுகிறீர்களா?” என கேட்டனர்.

அதற்கு ராஜ்குமார் “வீட்டை வாடகைக்கு விடப்போகிறோம் என யாரிடமும் சொல்லவில்லை” என அவர்களிடம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை பார்த்த பொதுமக்கள் 2 பேரின் மீது சந்தேகம் அடைந்து இதுபற்றி மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் பிரபு என்கிற கருணாபிரபு (வயது 33) மற்றும் அவருடைய மனைவி சவுமியா (31) என்பதும், இருவரும் வீடு வாடைகைக்கு கேட்பது போல் நடித்து பல்வேறு பகுதிகளில் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

இதுபற்றி அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் கூறியதாவது:-

கருணாபிரபு மற்றும் சவுமியா இருவரும் மாதவரம் சாரங்கபாணி நகர் 3-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மாதவரம் பகுதிகளில் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பர பலகையை பார்ப்பார்கள். பின்பு இருவரும் டிப்-டாப் உடையணிந்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்று வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்பார்கள்.

கொள்ளை அடிப்பார்கள்

பின்பு சாவியை வாங்கி வீட்டை திறந்து நோட்டமிடுவார்கள். வாடகைக்கு விடப்படும் வீட்டின் அருகே குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் விவரங்களை சேகரித்துக்கொள்வார்கள். வீட்டை பார்த்துவிட்டு ஒரு வாரத்தில் முன்பணம் தருகிறோம் என புறப்பட்டு விட்டு அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து செல்வார்கள்.

இதுதொடர்பாக இருவரின் மீதும் சென்னை சைதாப்பேட்டை, குமரன்நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர்கள் இருவரும் மீதும் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக 2015-ம் ஆண்டு சைதாப்பேட்டை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவன்-மனைவி கைது

அதன்பின்பு சிறையில் இருந்து வெளியே வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாதவரம் சாரங்கபாணி நகரில் தங்கிக் கொண்டு கொளத்தூர், ராஜமங்கலம், மாதவரம், சாஸ்திரிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாடகை கேட்பது போல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

கருணாபிரபு மற்றும் சவுமியாவை மாதவரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு வீட்டில் இருந்து கொள்ளையடித்த 7 பவுன் தங்க நகைகளை குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினார்கள். 

Next Story