பாதாள சாக்கடை குழியில் அடைப்பு வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீர்


பாதாள சாக்கடை குழியில் அடைப்பு வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீர்
x
தினத்தந்தி 21 July 2018 3:45 AM IST (Updated: 21 July 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கழிவுநீரானது வடிகால் வழியாக சென்றது. திறந்துவெளியில் கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் என்பதால் பாதாள சாக்கடை திட்டம் அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அது தோல்வி அடையும் வகையில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

பாதாள சாக்கடை குழியில் ஏற்படும் அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்துவிட்டு சென்றாலும் மீண்டும் கழிவுநீர் வெளியேறும் சம்பவம் தொடர் கதையாக இருக்கிறது. தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பை, சாலைக்கார தெரு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறிக் கொண்டு இருக்கிறது.

இந்த கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து குளம்போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றத்துடன் வீடுகளில் பொதுமக்கள் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. சில வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிட்டது. அவற்றை வாளியின் உதவியால் வெளியேற்றினர். கழிவுநீர் 10 நாட்களுக்கு மேலாக தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல டபீர்குளம் ரோட்டிலும் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. எனவே பாதாள சாக்கடை குழியில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story