ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கடலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கடலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்,
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று கடலூர் நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மருத்துவமனை அருகே உள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் 42-ம் ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு பெண்ணையாற்றில் இருந்து கரகம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 1.20 மணி அளவில் சாகை வார்த்தல் நடந்தது. இதில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சந்தன காப்பு தீபாராதனையும், மாலை 6 மணிக்கு கச்சேரியும், இரவு 7.30 மணிக்கு கும்பம் கொட்டுதலும், இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலாவும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு அம்மன் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.
கடலூர் புதுப்பாளையம் லோகாம்பாள் அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு கெடிலம் நதிக்கரையில் இருந்து கரகம் எடுத்து வீதி உலா வந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகா தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. அதன்பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு வீரனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலா காட்சியும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனர். கடலூர் பீச்ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கடலூர் பகுதியில் உள்ள பிற அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு, தீபாராதனை மற்றும் வழிபாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story