புதுக்குப்பம் கிராம மக்களுடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: தனியார் அனல் மின்நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது


புதுக்குப்பம் கிராம மக்களுடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: தனியார் அனல் மின்நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது
x
தினத்தந்தி 21 July 2018 4:45 AM IST (Updated: 21 July 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

தனியார் அனல்மின்நிலையத்துக்கு எதிராக போராடி வரும் புதுக்குப்பம் கிராம மக்களுடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், நேற்று 10-வது நாளாக இவர்களது போராட்டம் தொடர்ந்தது.

பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுக்குப்பம் கிராமம். இங்கு 700-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இயங்கி வரும் தனியார் அனல்மின் நிலையத்துக்கு ரெயில் மூலமாக நிலக்கரி எடுத்து வரப்படுகிறது. இதன் மூலம் காற்றில் பறக்கும் நிலக்கரி துகள்கள் கிராமத்தில் உள்ள வீடுகளின் மீது படிவதுடன், குடிநீர் தொட்டி, கிணறுகள் போன்றவற்றிலும் விழுகிறது. இதனால் குடிநீர் கலங்கலாக வருவதுடன், மக்கள் சுகாதாரமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அனல்மின் நிலையத்துக்கு கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டு வருவதற்காக கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. துறைமுகம் அமைந்தால், நிலக்கரி துகள்களால் மேலும் பாதிப்பு உருவாகும் என்கிற அச்சத்தில் கிராம மக்கள் அனல் மின் நிலையத்துக்கு எதிராக கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர்.

இதற்கென துறைமுகம் அமைக்கப்பட்டு வரும் இடத்துக்கு அருகே, சாமியானா பந்தல் அமைத்து, அதன் கீழ் அமர்ந்து மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர்களது கிராமத்துக்கு நேரடியாக சென்று சந்தித்த மாவட்ட கலெக்டர் தண்டபாணி, அனல்மின்நிலையம் விவகாரம் தொடர்பாக 2 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று தெரிவித்தார்.

இருப்பினும் கிராமத்து பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் கிராமத்தில் இயங்கும் அனல்மின்நிலையத்தை உடனடியாக மூடுவதுடன், துறைமுகம் அமைக்கும் பணியையும் உடனே கைவிட வேண்டும் என்று கூறி கலெக்டரின் காரை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தியதால், கலெக்டர் அங்கிருந்து சென்றார்.

இந்த சூழ்நிலையில், கிராம மக்களின் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, அவர்கள் அமைத்து இருந்த சாமியானா பந்தலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் கிராம மக்கள் அங்குள்ள அம்மன் கோவில் எதிரே உள்ள மரத்தடியில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்த கலெக்டர் தண்டபாணி அங்கு வரவில்லை. மாறாக சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் புதுக்குப்பத்துக்கு வந்து போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கிராம மக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வாருங்கள், அங்கு சமாதான கூட்டம் நடத்தி அதன் மூலம் தீர்வு காணலாம் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார். இதற்கு கிராம மக்கள் மறுப்பு தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தது.

அனல் மின்நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி நேற்றும் கிராம மக்கள் மரத்தடியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். நேற்று 10-வது நாளாக நீடித்த இந்த போராட்டத்தில் நாகை மாவட்டம் மற்றும் கடலூரில் மற்ற பகுதியில் உள்ள மீனவர்களும் கலந்து கொண்டு, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் புதுக்குப்பம் கரையோர பகுதியில் மீனவர்களின் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வருமானமின்றி இருக்கிறார்கள்.

Next Story