மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை, ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு


மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை, ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 21 July 2018 5:00 AM IST (Updated: 21 July 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் மணலூர்பேட்டை சாலை, அவலூர்பேட்டை சாலை போன்ற இடங்களில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட மண்பாடி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஞானமூர்த்தி கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

எங்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 500 மண்பாடி லாரிகள் ஓடவில்லை. மற்ற லாரிகள் என எடுத்து கொண்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தினால் மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடிக்கு மேல் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

Next Story