திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோரி குப்பை கிடங்கில் அமர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கோரி குப்பை கிடங்கில் அமர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை சரியாக செயல்படாதது குறித்து ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் ப.நாராயணன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் ராஜரத்தினம் வரவேற்றார்.
கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.நல்லதம்பி, முன்னாள் நகரசபை தலைவர் எஸ்.அரசு, எரிவாயு தகன மேடையை பராமரித்து வந்த ரெட்கிராஸ் தலைவர் பி.ஆர்.தேவராஜ், வக்கீல் குணசேகரன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் குட்டி என்கிற சீனிவாசன், டி.கே.அய்யப்பன், வீடியோ சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பின்னர் ஆணையாளர் நாராயணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருப்பத்தூர் நகராட்சி சார்பில் எரிவாயு தகன மேடை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எரிவாயு தகன மேடையை சீரமைக்க எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து நிதி தருவதாக கூறியுள்ளார்’ என்றார்.
இதனையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் எரிவாயு தகன மேடையையும், திருப்பத்தூர் நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டனர். அங்கு திடக்கழிவு மேலாண்மை அமைக்க ரூ.1 கோடியே 36 லட்சம் டெண்டர் விடப்பட்டு 10 மாதம் ஆகியும் ஏன் பணி செய்யவில்லை என அதிகாரிகளிடம், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள், நகராட்சி மேலாண்மை ஆணையரிடம் கேட்க வேண்டும் என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் குப்பை கிடங்கில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் முடித்து தருவதாக கூறினர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்ற வைப்பதால் அவுசிங்போர்டு, ப.வு.ச.நகர், மெயின் ரோடு, அட்வகேட் ராமநாதன் தெரு முழுவதும் புகை பரவி பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழக அரசு நிதி ஒதுக்கியும், திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் முடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story