குதிரையாறு அணைப்பகுதியில் ஜமுக்காளப்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்


குதிரையாறு அணைப்பகுதியில் ஜமுக்காளப்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
தினத்தந்தி 21 July 2018 12:00 AM GMT (Updated: 20 July 2018 11:49 PM GMT)

குதிரையாறு அணைப்பகுதியில் உள்ள ஜமுக்காளப்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பழனி, 

இயற்கையின் மிகப்பெரிய கொடையாக மலைகள் விளங்குகின்றன. அந்த மலைகளில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. இதில் பல சுற்றுலா தலங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள். ஆனால் சில நீர்வீழ்ச்சிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கின்றன. அவை அமைந்துள்ள இடமும் நம் கற்பனைக்கு எட்டாத வகையில் உள்ளன. பசுமையை பரப்பும் மரங்களுக்கு நடுவில் வெள்ளிச்சிதறல்களாய் கொட்டும் தண்ணீர், கண்களுக்கு சிறந்த விருந்தாகவே அமையும். ஆனால் அந்த நீர்வீழ்ச்சிகள் குறித்து பொதுமக்களுக்கோ, சுற்றுலா பயணிகளுக்கோ தெரிவதில்லை. குற்றாலம், கொடைக்கானலில் இருக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல இந்த நீர்வீழ்ச்சிகள். ஆனாலும் அவை குறித்த தகவல்கள் இன்றளவும் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள குதிரையாறு அணைப்பகுதியிலும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் ஓசை கூட வெளி உலகுக்கு தெரிவதில்லை. அதுகுறித்த விவரம் வருமாறு:-

பாப்பம்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் குதிரையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 80 அடி ஆகும். அணையில் தற்போது 42.83 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் பகுதியில் மழை பெய்யும் போது இந்த அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இவ்வாறு வரும் தண்ணீர் அணைப்பகுதியில் அமைந்துள்ள ஜமுக்காளப்பாறை என்ற பகுதிக்கு வருகிறது.

ஜமுக்காளங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல இந்த பாறை காட்சி அளிக்கும். இதனாலேயே அந்த பாறைக்கு ஜமுக்காளப்பாறை என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுவர். அந்த இடத்தில் குன்று போன்ற அமைப்பு இருக்கிறது. அதனை தாண்டி தண்ணீர் கொட்டும் போது நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது.

பின்னர் ஜமுக்காளப்பாறை நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குதிரையாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது. அணையில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்ல முறையான பாதை கிடையாது. வழிநெடுகிலும் செடி, கொடிகள் அடர்ந்து படர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களே இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல அச்சப்படுகின்றனர். இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுலா பயணிகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த இடம் இருப்பதால் வெளிநபர்கள் யாரும் அவ்வளவு எளிதில் இங்கு செல்ல முடியாது. ஆனால் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் இயற்கையின் மிகச்சிறந்த படைப்பு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நீர்வீழ்ச்சி பகுதி ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் நின்று குளியல் போடும் அளவுக்கு மேடை போன்று பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தபடாமல் இருப்பதால் அந்த பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டதாக மாறி இருக்கின்றன.

மேலும் நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் மலைப்பகுதியில் வளர்ந்துள்ள பல்வேறு மூலிகைகளுடன் கலந்து வருகிறது. இதனால் அந்த தண்ணீர் மருத்துவ குணம் மிகுந்ததாக உள்ளது. பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த நீர்வீழ்ச்சியை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். எனவே ஜமுக்காளப்பாறை நீர்வீழ்ச்சியை சுற்றுலாதலமாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

Next Story