2 நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் 25-ந்தேதி திண்டுக்கல் வருகை: தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்
2 நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 25-ந்தேதி திண்டுக்கல் வருகிறார். தூய்மை இந்தியா திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்கிறார்.
திண்டுக்கல்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஏற்கனவே, கோவை, நெல்லை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். கவர்னரின் சுற்றுப்பயணத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கருப்பு கொடியும் காட்டி வருகின்றனர். கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்படி, வருகிற 25-ந்தேதி காலை அவர் திண்டுக்கல் வருகிறார். முன்னதாக, காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர், மதியம் 12.15 மணிக்கு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். மேலும், பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் குறித்து நடைபெறும் கண்காட்சியை ஆய்வு செய்கிறார். பின்னர் மாணவர்கள், பேராசிரியர்கள் முன்பு உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் திண்டுக்கல் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார். இதைத்தொடர்ந்து, அங்கு மறுநாள் காலை 11.45 மணி முதல் மதியம் 1.45 வரை அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். மேலும் தூய்மை இந்தியா திட்ட பணிகளையும் ஆய்வு செய்கிறார்.
இதையடுத்து, மதுரைக்கு காரில் செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு கவர்னர் வருவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கவர்னர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, வருகிற 24-ந்தேதி மதுரை மற்றும் திண்டுக்கல்லுக்கு வரும் கவர்னரின் தனி பாதுகாவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story