இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு: கோவில் நுழைவு வாயில் கதவை பூட்டியதால் பரபரப்பு


இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு: கோவில் நுழைவு வாயில் கதவை பூட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 July 2018 6:00 AM IST (Updated: 21 July 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கோவிலின் நுழைவுவாயில் கதவை நிர்வாகி பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னிவாடி, 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தெத்துப்பட்டியில் பிரசித்தி பெற்ற ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகாளியம்மன், ஆதிராஜகாளியம்மன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதைத்தவிர விநாயகர், முருகன், சிவன், நாகர், ஆஞ்சநேயர், துர்க்கையம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன.

இந்த கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவில் துரைநடராஜன் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பிரபலமான இந்த கோவிலை, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு முடிவு செய்தது. இதற்கு துரை நடராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவில், அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்பேரில் கோவிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோபிநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் கணபதிமுருகன், திண்டுக்கல் மலையடிவார சீனிவாசப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் ஊழியர்கள் நேற்று ராஜகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

ஆனால் கோவிலை கையகப்படுத்த அதிகாரிகள் வருவதை அறிந்த கோவிலை நிர்வகித்து வரும் துரைநடராஜனின் மகன் சாந்தகுமார் முன்பக்க நுழைவு வாயில் கதவை பூட்டிவிட்டார்.

இதுமட்டுமின்றி கோவிலுக்குள் செல்ல முடியாமல் அதிகாரிகளை தடுத்து சாந்தகுமார் வாக்குவாதம் செய்தார். இருப்பினும் அதிகாரிகள் மற்றொரு பாதை வழியாக கோவிலுக்குள் சென்றனர். வாக்குவாதம் செய்த சாந்தகுமாரிடம் கோவிலை கையகப்படுத்துவதற்கான கோர்ட்டின் உத்தரவு நகலை காட்டினர். இதையடுத்து அவர் கோவிலுக்கு செல்லும் நுழைவுவாயில் கதவை திறந்து விட்டார். பின்னர் அறநிலையத்துறை சார்பில், கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டன. முன்னதாக நேற்று ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story