மார்த்தாண்டத்தில் வேகமாக நடைபெறும் மேம்பால பணி


மார்த்தாண்டத்தில் வேகமாக நடைபெறும் மேம்பால பணி
x
தினத்தந்தி 22 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 9:41 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் மேம்பால பணி வெட்டுமணியில் இருந்து பம்மம் நோக்கி வேகமாக நடைபெற்று வருகிறது.

குழித்துறை,

மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டுமணியில் இருந்து பம்மம் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம்  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் வெட்டுமணியில் முதல் மார்த்தாண்டம் சந்திப்பு வரை ஒரு கட்டமாகவும், மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து பம்மம் வரை மற்றொரு கட்டமாகவும் சாலையின் நடுவே தூண்கள் அமைத்து நடைபெறுகிறது.

மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் பஸ் நிலையத்திற்கு திரும்பும் வகையில் ரவுண்டானா அமைவதால் சாலையின் இரு பக்கமும் தூண்கள் அமைக்கப்படுகின்றன.

பால பணிகளால் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். பஸ்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. பம்மம் முதல் வெட்டுமணி வரை பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தற்போது மார்த்தாண்டம் மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் சிமெண்ட் தளம் அமைத்தல், சாலையில் மின்சார கேபிள் அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

குழித்துறையில் இருந்து வரும் வாகனங்கள் வெட்டுமணியில் இருந்து மேம்பாலத்தில் ஏறி செல்லும் வகையில் சாய்வு சாலை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடர்ந்து பாலத்தின் மேல் பகுதியில் காங்கிரீட் போடப்பட்டு வருகிறது. இதற்காக காங்கிரீட் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் பாலத்தில் ஏறி சென்ற வண்ணம் உள்ளன.

இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், என்ஜினீயர்கள் கண்காணித்து வருகிறார்கள்.  

மேம்பால பணிகளை இதே வேகத்தில் தொடர்ந்து மேற்கொண்டு விரைவில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story