நெல்லை மாவட்டத்தில் 2–வது நாளாக லாரிகள் ஓடவில்லை காய்கறிகள் விலை கணிசமாக உயர்வு
நெல்லை மாவட்டத்தில் 2–வது நாளாக லாரிகள் ஓடவில்லை. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் 2–வது நாளாக லாரிகள் ஓடவில்லை. இதனால் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
வேலை நிறுத்தம்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வை கண்டித்தும், காப்பீட்டு தொகை உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பழைய சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே கையில் எடுத்து, 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே விலை மாற்றத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
நேற்று 2–வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்தது. இதனால் நெல்லை நெல்லை மாவட்டத்தில் 5,200 லாரிகள் ஓடவில்லை. நெல்லை டவுன் நயினார்குளம் ரோடு, தாழையூத்து, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில லாரிகளின் முன்பக்க கண்ணாடியில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகளும் ஒட்டப்பட்டு உள்ளன.
காய்கறிகள் விலை உயர்வு2–வது நாளாக லாரிகள் ஓடாததால் பெரிய லாரிகளுக்கு பதில் லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் காய்கறிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை 10 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.
நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வெளியூர்களில் இருந்து குறைவான லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. அந்த காய்கறிகள் வழக்கத்தைவிட சற்று கூடுதல் விலைக்கு ஏலம் விடப்பட்டன. அவை லோடு ஆட்டோ மற்றும் சிறிய ரக மினி லாரிகளில் கேரளா மற்றும் நெல்லை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மார்க்கெட்டுக்கு நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து உருளை கிழங்கு மற்றும் பல்லாரி ஆகியவை மொத்தமாக கொண்டு வந்து இறக்கப்பட்டன.
பாதிப்பு ஏற்படும்இதுகுறித்து நயினார்குளம் மொத்த காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு முன்பே லாரிகளில் காய்கறிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. அவை நேற்று முன்தினமும், நேற்றும் கொண்டு வரப்பட்டன. இதனால் வழக்கம் போல் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. எனவே காய்கறிகள் எதுவும் தேக்கம் அடையவில்லை. விலையிலும் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படக்கூடும்’’ என்றனர்.
நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் நேற்று காலை நிலவரப்படி கத்தரிக்காய் ஒரு கிலோவுக்கு ரூ.30ல் இருந்து ரூ.32 ஆகவும், அவரைக்காய் ரூ.62ல் இருந்து ரூ.64 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.65ல் இருந்து ரூ.68 ஆகவும், பல்லாரி ரூ.30ல் இருந்து ரூ.37 ஆகவும், காரட் ரூ.42ல் இருந்து ரூ.46 ஆகவும், காராமணி ரூ.18ல் இருந்து ரூ.20 ஆகவும் விலை உயர்ந்துள்ளன.
இதே போல் மற்ற வணிக பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லையில் லோடு ஆட்டோக்களில் பல்வேறு பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. அவர்களுக்கு தற்போது கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.