லாரிகள் வேலை நிறுத்தத்தால் வர்த்தகம் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்ட அளவில் லாரி சங்க நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மோகன், பொருளாளர் கண்ணன், துணை தலைவர் சேகர், சுரேஷ், துணை செயலாளர் திருமுருகன் மற்றும் டிப்பர் லாரி சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, கருணாநிதி, களஞ்சியம், தமிழரசு, ராஜமாணிக்கம், காமராஜ், கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,500 சரக்கு ஏற்றுமதி செய்யும் லாரிகளும், 1800–க்கும் மேற்பட்ட சரக்கு இறக்குமதி மற்றும் டிப்பர் லாரிகளும் இயங்கி வருகின்றன. இந்த லாரிகள் அனைத்தும் டீசல் விலை உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் சங்கம் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் வர்த்தகம், கட்டுமான பொருட்கள், ஏற்றுமதி பொருட்கள் பாதிக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். போராட்டம் தொடரும்பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.