திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே உள்ளது பெருமுளை ஊராட்சி. இங்குள்ள சமத்துவபுரத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமீப காலமாக இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதவிர சமத்துவபுரம் பகுதியில் தெரு மின்விளக்குள் சரிவர எரிவதில்லை.
இது குறித்து அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டு நேற்று பெருமுளை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும், தெரு மின்விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் சசிக்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் தெரு மின்விளக்குகளையும் எரிய வைக்கவும், சமத்துவபுரத்தில் உள்ள மேல்நீர் நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவிட்டால் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் அறிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.