தூத்துக்குடி மாவட்டத்தில் 22 கண்மாய்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 22 கண்மாய்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 22 கண்மாய்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
குளம் தூர்வாரும் பணிகயத்தாறு தாய்படைதாங்கி குளத்தை குடிமராமத்து திட்டத்தின்கீழ், ரூ.38 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நேற்று காலையில் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா முன்னிலை வகித்தார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து, குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் குளத்தை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணி நடந்தது.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.10 கோடி ஒதுக்கீடுகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் 2–வது கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இது தமிழகத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். 82 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையை தூர்வாரி, அதில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 22 கண்மாய்களை மழைக்காலத்துக்கு முன்பாக தூர்வாருவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர், அரசு வக்கீல்கள், சட்ட வல்லுனர்களிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வார். திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் எனது (அமைச்சர் கடம்பூர் ராஜூ) தலைமையில் அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் திரைப்படத்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
பூமி பூஜைமுன்னதாக அவர், கடம்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் கடம்பூர் வடக்குரத வீதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் அறையுடன் கூடிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், யூனியன் ஆணையாளர்கள் முத்துகுமார், சீனிவாசன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், அழகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.