தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடம் இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காவிரி நதிநீர் ஆணையம்காவிரி பிரச்சினையில் அரசு பல்வேறு முடிவுகள் எடுத்ததன் விளைவாக காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டு அதன்மூலம் தமிழகம் இழந்த உரிமை மீட்கப்பட்டு உள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளார். அதேபோல் கடைமடை கால்வாய் வரை பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையை பொறுத்தவரை 82 ஆண்டுகளுக்கு பிறகு குடிமராமத்து திட்டத்தின் மூலமாக தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அதனால் தற்போது அதிக நீரை தேக்கி வைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் நமது மாவட்டத்தில் 22 நீர்தேக்குகின்ற கண்மாய்களை குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
தேசிய கட்சிகளுக்கு இடமில்லை8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை அதனை முதலில் எதிர்த்தவர்கள் கூட தற்போது ஆதரித்து வருகிறார்கள். தற்போது அந்த பகுதி மக்கள் தானாக முன்வந்து நிலங்களை ஒப்படைக்கின்ற பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இன்றைக்குள்ள சந்தை மதிப்பீடுபடி இழப்பீடு வழங்கப்பட்டு, தற்போது 90 சதவீதம் இடம் எடுக்கும் பணி முடிவடைந்து உள்ளது.
தமிழகத்தை வஞ்சிக்கின்றவர்கள் யாரையும் இதுவரை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை. எனவே தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.