இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், திருநங்கைகள் வலியுறுத்தல்


இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், திருநங்கைகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 July 2018 3:45 AM IST (Updated: 22 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனைமலை,

ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்தில் திருநங்கைகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனைமலை வட்டார திருநங்கைகள் நலச்சங்க தலைவி நிலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவை, சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் நலச்சங்கத்தின் தலைவிகள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஆனைமலை வட்டார திருநங்கைகள் நலச்சங்க தலைவி நிலா கூறியதாவது:–

திருநங்கைகள் சிலர் கடை கடையாக சென்று பணம் வசூலிப்பது, பாலியல் தொழில் ஈடுபடுவது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதில் கடைகளில் பணம் வசூலிப்பதில் சிலர் வரம்பு மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துகொண்டு இருக்கின்றன. திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் சுயதொழில் செய்து சமூகத்தில் மரியாதையுடன் வாழ மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு, இலவச வீட்டு மனைப்பட்டா போன்றவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கொடுக்கின்றனர். சமூகநலத்துறை சார்பில் வாழ்வாதார பயிற்சிகளும் சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி அனைத்து திருநங்கைகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் முறையாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவச வீட்டு மனைப்பட்டா மட்டும் வழங்கினால் அங்கு எப்படி வீடு கட்ட முடியும். திருநங்கைகளில் பெரும்பாலானோர் சமையல் வேலை, கூலி வேலைக்கு செல்கிறார்கள். அதில் சாப்பாடு, வீட்டு வாடகை போன்றவற்றை சமாளிப்பது சிரமமாக உள்ளது. ஆகவே இலவச வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்திலும் திருநங்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story