ஈரோடு மாவட்டத்தில் 2–வது நாளாக லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து முடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் 2–வது நாளாக லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து முடங்கியது. ரூ.30 கோடி பொருட்கள் தேங்கின.
ஈரோடு,
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவிப்பின்படி நேற்று முன்தினம் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுமார் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
நேற்று 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. நேற்று வெளியூர்களில் இருந்து லாரிகள் எதுவும் வரவில்லை. இதனால் சரக்கு ஏற்றி இறக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பார்சல் கிடங்குகளில் படுத்து இருந்தனர்.
நரிப்பள்ளம் லாரி நிறுத்தம் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. லாரி டிரைவர்கள் கூட்டாக சேர்ந்து உணவு சமைத்து அங்கேயே சாப்பிட்டு ஓய்வு எடுத்து வருகிறார்கள். சிலர் லாரிகளில் ஏற்கனவே பொருத்தி வைத்திருக்கும் கியாஸ் அடுப்புகளை வைத்து உணவு சமைத்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் குப்பைக்காடு பகுதியில் சரக்கு லாரிகள் எதுவும் இல்லாமல் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன.
உள்ளூர் பார்சல்கள் மட்டும் மினிடோர் ஆட்டோ, மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டன. இன்னும் ஓரிரு நாட்கள் லாரிகள் ஓடாவிட்டால் இந்த சேவையும் பாதிப்படையும் என்று பார்சல் அலுவலக பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு இணை செயலாளர் என்.சிவநேசன் கூறியதாவது:–
அகில இந்திய அளவில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கட்டணத்தால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் கிடைத்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்தால் சுங்கக்கட்டண சாவடிகளை அகற்றுவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அறிவித்தபடி சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இதுபோல் பெட்ரோல் –டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வரவேண்டும். அப்போது பெட்ரோல் –டீசல் விலை குறையும். அத்தியாவசிய பொருட்கள் விலையும் குறையும். ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எனவே அகில இந்திய அளவில் இந்த வேலை நிறுத்த போராட்டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.30 கோடி பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளது.
2 நாட்களாக லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஈரோட்டில் ஜவுளி, மாட்டுத்தீவனம், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் பெரும்பாலும் பிற மாநிலங்களில் இருந்து வருகிறது. தற்போது அவற்றின் வரத்து முழுமையாக தடைபட்டு இருப்பதால் உற்பத்தி பாதிக்கும். இந்த தொழிற்சாலைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே உடனடியாக மத்திய அரசு லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.