லாரிகள் வேலை நிறுத்தத்தால் பட்டாசு, தீப்பெட்டிகள் தேக்கம்


லாரிகள் வேலை நிறுத்தத்தால் பட்டாசு, தீப்பெட்டிகள் தேக்கம்
x
தினத்தந்தி 22 July 2018 3:30 AM IST (Updated: 22 July 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால் மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு பண்டல்கள் மற்றூம் நூல் பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன.

விருதுநகர்,

பெட்ரோல், டீசல் விலையை 6 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 2–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் 650 லாரிகள் இயங்கவில்லை.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சாத்தூர், சிவகாசி பகுதிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லவேண்டிய தீப்பெட்டி மற்றும் பட்டாசு பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன. இந்த லாரிகள் வேலை நிறுத்தம் தொடருமானால் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும் ராஜபாளையம் பகுதியில் நூற்பு ஆலைகளில் இருந்து நூல் பண்டல்கள் அனுப்புவதிலும், ஆலைகளுக்கு பஞ்சு பொதிகள் வருவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வணிக நகரான விருதுநகரில் மல்லி, பருப்பு மற்றும் வத்தல் ஆகியவை வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து லாரிகளில் வரவேண்டிய நிலை உள்ளது. ஆனால் லாரிகள் வேலை நிறுத்தத்தால் சரக்கு வரத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று வணிகர்கள் கூறினர்.


Next Story