புதுச்சேரி அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை


புதுச்சேரி அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 22 July 2018 5:15 AM IST (Updated: 22 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அருகே வெடிகுண்டு வீசி கத்தியால் வெட்டி ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்டார்.

வானூர்,

புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் தங்கும் விடுதியும் நடத்தி வந்தார். நேற்று மாலை பாபு, மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

குயிலாப்பாளையம் அய்யனார்கோவில் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த ஒரு கார், அவருடைய மோட்டார் சைக்கிளை முந்திச்சென்று வழிமறித்தது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாபு நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த காரில் இருந்து திமுதிமுவென்று 4 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கியதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தியது. அப்போது ஒரு ஆசாமி திடீரென்று நாட்டு வெடிகுண்டை எடுத்து பாபுவை நோக்கி வீசினார்.

அவருக்கு அருகில் விழுந்து அந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் பாபு தொடர்ந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை விரட்டிச் சென்று பாபுவை வெட்டினர். அவரது கழுத்தில் வெட்டு விழுந்து அவர் நிலை குலைந்து சரிந்து விழுந்தார். தொடர்ந்து அந்த கும்பல் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் பாபு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதன்பின் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story