சேலத்தில் 95 சதவீதம் லாரிகள் ஓடவில்லை தொழிலாளர்கள் பரிதவிப்பு
சேலத்தில் 2-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 95 சதவீதம் லாரிகள் ஓடவில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவித்து வரு கிறார்கள்.
சேலம்,
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று 2-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 34 ஆயிரம் லாரிகளில் சுமார் 95 சதவீதம் லாரிகள் ஓடவில்லை.
சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநில லாரி டிரைவர்கள் வேலை இழந்து பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும்பாலான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சேலம்-பெங்களூரு, சேலம்-சென்னை போன்ற பைபாஸ் சாலைகளில் லாரிகள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது.
சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகர் பகுதியில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடம் உள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அங்கு மணல் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லாரி டிரைவர்கள், கிளனர்கள் வேலை இல்லாமல் லாரியின் முன்பகுதியில் அமர்ந்து தாயம் விளையாடியதை காணமுடிந்தது.
சேலம் சத்திரம் ரெயில்வே கூட்ஸ் செட்டிற்கு நேற்று வடமாநிலங்களில் இருந்து 2 ரெயில்களில் கோதுமை மற்றும் சிமெண்டு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. லாரிகள் வேலை நிறுத்தம் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் என்பதால் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு, கோதுமை மற்றும் சிமெண்டு மூட்டைகளை ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, ஜவுளி, இரும்பு கம்பிகள், மஞ்சள், புளி, மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். ஆனால் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக குடோன்களில் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
இதுதவிர, சேலம் மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளி உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் உழவர் சந்தை மற்றும் வெளி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 95 சதவீத லாரிகள் இயங்கவில்லை. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி உரிமையாளர்களுக்கு வாடகை மூலம் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமின்றி லாரி தொழிலை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே, லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story