மேச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து 15 மாணவிகள் காயம்


மேச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து 15 மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 22 July 2018 3:15 AM IST (Updated: 22 July 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

மேச்சேரி,

இதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவிகள் 33 பேர் மற்றும் 3 பயிற்சியாளர்கள் ரெயிலில் வந்தனர். அவர்கள் மேச்சேரி குட்டப்பட்டி ரெயில் நிலையத்தில் இறங்கினார்கள். பின்னர் அவர்கள் 36 பேரும் கல்லூரி பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். மேச்சேரி பகுதியை சேர்ந்த டிரைவர் அரிகரன் என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ்சில் டிரைவர் உதவியாளர் ஒருவர் உள்பட மொத்தம் 38 பேர் பயணம் செய்தனர்.

அந்த பஸ் மேச்சேரி அருகே நங்கவள்ளி சாலையில் அமரத்தானூர் பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மாணவிகள் அக்‌ஷயா (17), ரித்திகா (17), பூர்ணிமா (17) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். மேலும் டிரைவரும் காயம் அடைந்தார். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓமலூர், மேட்டூர், சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விபத்து பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும் அவர்கள் மாணவிகளுக்கு பழங்கள், பிஸ்கட் போன்றவற்றை வழங்கினார்கள்.


Next Story