மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாக நான் ஒருபோதும் அறிவிக்கவில்லை முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி
மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாக நான் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்று முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாக நான் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்று முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மாணவ–மாணவிகள் போராட்டம்கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியிலும் தொடருகிறது. அதுபோல, மற்ற பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டது. ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி மற்ற பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க அரசு மறுத்து வருகிறது.
இதனை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து முதல்–மந்திரி குமாரசாமியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–
நான் அறிவிக்கவில்லைகாங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த சமுதாயங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கவதாக நான் அறிவிக்கவில்லை. தற்போதும் அதுபற்றி நான் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 6–வது இடத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் சொல்லி வருகிறார். ஆனால் நாட்டு மக்கள் ஒவ்வொன்றுக்கும் மானியம் கேட்கிறார்கள். இதனால் நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்தும், மக்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்பது குறித்தும் சிந்தித்து வருகிறேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.