கர்நாடகத்தில் 10,500 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா தகவல்
கர்நாடகத்தில் 10,500 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா தெரிவித்தார்.
மைசூரு,
கர்நாடகத்தில் 10,500 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி ஜி.டி.தேவேகவுடா தெரிவித்தார்.
மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேட்டிகர்நாடக உயர் கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா நேற்று மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நான் அதிகம் படிக்காவிட்டாலும், கல்வித்துறையை சமாளிக்கும் மனஉறுதி என்னிடம் உள்ளது. இந்த துறையில் இருக்க எனக்கு இஷ்டமில்லை. தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த துறையை ஏற்றுக்கொண்டுள்ளேன். சமீபத்தில் பெலகாவியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், கல்வி நிபுணர்கள் உயர் கல்வித்துறையை நீங்கள் வகிக்க வேண்டும் என்றும், அதனை சமாளிக்கும் திறமை உங்களிடம் உள்ளது என்றும் எனக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். அதனால் தான் இந்த துறையை வகித்து வருகிறேன்.
10,500 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்தற்போது அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் பள்ளி, கல்லூரிகள் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. அவர்கள் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆனாலும் கூடிய விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில் அதிகமாக காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் கர்நாடகத்தில் 10,500 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்–மந்திரியுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.