பெங்களூரு கிளப் லாக்கர்களில் பதுக்கி வைத்த ரூ.11¾ கோடி நகை, பணம் சிக்கின ரூ.550 கோடி சொத்துக்கள் பற்றி விசாரணை


பெங்களூரு கிளப் லாக்கர்களில் பதுக்கி வைத்த ரூ.11¾ கோடி நகை, பணம் சிக்கின ரூ.550 கோடி சொத்துக்கள் பற்றி  விசாரணை
x
தினத்தந்தி 22 July 2018 4:15 AM IST (Updated: 22 July 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், கிளப் லாக்கர்களில் இருந்து ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.11¾ கோடி தங்க, வைர நகைகள்-பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரு,

பெங்களூருவில், கிளப் லாக்கர்களில் இருந்து ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.11¾ கோடி தங்க, வைர நகைகள்-பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தொழில் அதிபரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் ‘பவுரிங் இன்ஸ்டிடியூட் கிளப்‘ உள்ளது.

தொழில்அதிபர்கள்

இந்த கிளப்பில் தொழில்அதிபர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த உறுப்பினர்கள் கிளப் கட்டிடத்தில் தங்கி செல்ல அறை வசதிகள் உள்ளன. இங்கு உள்ள உறுப்பினர்கள் டென்னிஸ், பேட்மிண்டன், கைப்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகள் விளையாடி வருகிறார்கள்.

இதனால், அவர்கள் தங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ‘ஷூ‘க்களை பாதுகாக்கும் வகையில் அந்த கிளப் கட்டிடத்தின் உள்ளே பாதுகாப்பு பெட்டகங்கள் (லாக்கர்கள்) ஒதுக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள பல்வேறு பாதுகாப்பு பெட்டகங்கள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் அந்த கிளப்பில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் விளையாட்டு உபகரணங்களை வைத்து கொள்வதற்கு பாதுகாப்பு பெட்டகங்கள் இல்லை.

நோட்டீசு

இதனால், கிளப் நிர்வாகம் பாதுகாப்பு பெட்டகங்கள் வைத்துள்ள உறுப்பினர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நோட்டீசு அனுப்பியது. அதில், ‘பாதுகாப்பு பெட்டகத்தின் உரிமம் காலாவதியானவர்கள், புதுப்பித்து கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காவிட்டால் பாதுகாப்பு பெட்டகங்கள் உடைத்து பிறருக்கு ஒதுக்கப்படும்‘ என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, பல்வேறு உறுப்பினர்கள் வந்து தங்களது பாதுகாப்பு பெட்டகங்களின் உரிமத்தை புதுப்பித்து கொண்டனர். பலர், தங்களின் பொருட்களை எடுத்து கொண்டு பாதுகாப்பு பெட்டகங்களை காலி செய்தனர். இந்த நிலையில், சிலர் பாதுகாப்பு பெட்டகங்களை புதுப்பிக்கவோ, காலி செய்யவோ முன்வரவில்லை. இதனால், அவர்களுக்கு மீண்டும், மீண்டும் நோட்டீசு அனுப்பப்பட்டது.

கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள்

இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி புதுப்பிக்க வராத உறுப்பினர்களின் பாதுகாப்பு பெட்டகங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டன. அதனை அந்த கிளப் நிர்வாகத்தினர் வீடியோவாக படம் பிடித்து கொண்டனர். இந்த வேளையில், தொழில்அதிபர் அவினாஸ் அமர்லால் என்பவருக்கு சொந்தமான 61, 71 மற்றும் 78 ஆகிய எண்கள் கொண்ட 3 பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த பைகள் கைப்பற்றப்பட்டன.

அந்த பைகளை கிளப் நிர்வாகத்தினர் திறந்து பார்த்தனர். அப்போது அதில், தங்க கட்டிகள், தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், கட்டுக்கட்டாக பணம், காசோலைகள், சொத்து பத்திரங்கள் ஆகியவை இருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த கிளப் நிர்வாகிகள் உடனடியாக பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சந்திர குப்தாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், துணை போலீஸ் கமிஷனர் சந்திர குப்தா, கப்பன் பார்க் போலீசாருடன் கிளப்புக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ரூ.550 கோடி சொத்து ஆவணங்கள்

அப்போது, கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், கைக்கெடிகாரங்கள், ஆவணங்களின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் இருக்கும் என்று முதலில் கணக்கிடப்பட்டது. இதனால், சம்பவம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுரை வழங்கினர். அதன்படி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் கிளப்புக்கு வந்து அங்கு இருந்த பணம், நகைகள், தங்க கட்டிகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி பரிசீலனை செய்தனர்.

அப்போது, பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து ரூ.550 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.7.80 கோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள், ரூ.3.90 கோடி ரொக்கம், ரூ.18 லட்சம் மதிப்பிலான 650 கிராம் தங்க கட்டிகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த சொத்துகளுக்கான வருமானம் அவினாஸ் அமர்லாலுக்கு எங்கிருந்து வந்தது?, வரி ஏய்ப்பு செய்து அவர் சொத்து குவித்தாரா? என்பது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடு, அலுவலகங்களில் சோதனை

இந்த விசாரணையின் முதல்கட்டமாக வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் உள்ள அவருடைய வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ச்சியாக தொழில்அதிபர் அவினாஸ் அமர்லாலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story