பல்லடம் அருகே பெண் கொலை; கள்ளக்காதலன் வெறிச்செயல் போலீசார் விசாரணை


பல்லடம் அருகே பெண் கொலை; கள்ளக்காதலன் வெறிச்செயல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2018 3:24 AM IST (Updated: 22 July 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பெண்ணை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலன் தலைமறைவானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்லடம்,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்தவர் சேகர்(வயது 45). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி நாகரத்தினம்(43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சேகர் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி கிராமத்தில் சின்ன அய்யன் கோவில் பிரிவு பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள உறவினரின் சலவையகத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறான்.

இந்த நிலையில் இளையமகனுக்கு சாதி சான்றிதழ் வாங்குவதற்காக சேகர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு சாதி சான்றிதழை வாங்கி விட்டு, கடந்த 17-ந்தேதி அவர் இச்சிப்பட்டிக்கு வந்தார். அப்போது, நாகரத்தினம் வீட்டில் இல்லை. நாகரத்தினத்திடம் செல்போன் இல்லாததால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் தனது மனைவி குறித்து சேகர் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது, நாகரத்தினம் கடந்த 16-ந்தேதி ஆட்டோவில் சென்றதை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனால் அவர், திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன் பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று சேகர் நினைத்துக்கொண்டார்.

இந்தநிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இருந்து கோடாங்கிபாளையம் செல்லும் வழியில் எம்.ஜி.ஆர்.நகரில் விசைத்தறி தொழிலாளி ஜான்சன்(50) என்பவரின் வீட்டில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே பல்லடம் துணை போலீஸ்சூப்பிரண்டு முத்துசாமி தலைமையில், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துசாமி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், ஜான்சன் வீட்டில் இறந்து கிடப்பது சேகரின் மனைவி நாகரத்தினம் என்பதும், அவருக்கும், மனைவியை பிரிந்து வாழும் ஜான்சனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இதனால் கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நாகரத்தினம் ஜான்சன் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அத்துடன் ஜான்சனும் தலைமறைவாகி இருந்தார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நாகரத்தினத்தை கொலை செய்துவிட்டு ஜான்சன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

மேலும் நாகரத்தினத்தின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால், அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்று உடனடியாக தெரியவில்லை. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ஜான்சனை கைது செய்தால் மட்டுமே முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நாகரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் சேகர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை தேடி வருகிறார்கள். பெண்ணை கள்ளக்காதலனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story