ஆவடியில், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட கஞ்சா வியாபாரி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்


ஆவடியில், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட கஞ்சா வியாபாரி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 22 July 2018 3:53 AM IST (Updated: 22 July 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட கஞ்சா வியாபாரி போலீஸ் பிடியில் இருந்த தப்பியோடினார். 6 போலீசார் துரத்தியும் அவரை பிடிக்க முடியவில்லை.

ஆவடி, 

சென்னை சோழவரம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திருமுல்லைவாயல் அருகே அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, பிரபல கஞ்சா வியாபாரிகளான கோயம்புத்தூர் கவுண்டன் புதூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த ரகுராமன் (வயது 23) மற்றும் சரண்குமார் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரும் சுமார் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து இருவரையும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகம் கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் விசாரித்து விட்டு இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

தப்பி ஓட்டம்

அங்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் 5 போலீசார் உடன் இருந்தனர். அப்போது திடீரென ரகுராமன் போலீசாரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை துரத்தி சென்றனர். ஆனால் அதற்குள் ரகுராமன் வேகமாக ஓடி மறைந்து விட்டார்.

இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி தப்பியோடிய சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story