வறண்டு விடும் நிலையில் பூண்டி, சோழவரம் ஏரிகள்: சென்னைக்கு தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை


வறண்டு விடும் நிலையில் பூண்டி, சோழவரம் ஏரிகள்: சென்னைக்கு தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 22 July 2018 3:57 AM IST (Updated: 22 July 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பூண்டி, சோழவரம் ஆகிய 2 ஏரிகள் விரைவில் வறண்டு விடும் நிலையில் உள்ளன.

சென்னை, 

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பூண்டி ஏரியில் இருந்து 27 கனஅடியும், சோழவரம் ஏரியில் 13 கனஅடியும், புழல் ஏரியில் 103 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 109 கனஅடியும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதுதவிர நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் வீதம் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

அதேபோல் நெய்வேலியில் உள்ள சுரங்கம் மற்றும் அப்பகுதியில் உள்ள பரவனாற்று பகுதியில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீர், 70 முதல் 80 மில்லியன் லிட்டர் வீதம் வீராணம் குழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

வறண்டு வரும் ஏரிகள்

மழை இல்லாததாலும், கடும்வெயில் காரணமாகவும் பூண்டி ஏரியில் 76 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 39 மில்லியன் கன அடியும் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. வழக்கமான நீர் மட்டத்தை விட கீழே சென்றதால் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சோழவரம், புழல் ஏரிகள் வறண்டதுடன், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் தலா 21 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. ஏரிகள் வறண்டு விடும் நிலை ஏற்பட்டால், சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் மாநகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை குடிநீர் வாரியம் வினியோகம் செய்யும் குடிநீரை மட்டுமே மக்கள் நம்பி இருக்கின்றனர். ஆனால் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வீராணம் தண்ணீர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலைமையை நாளுக்கு நாள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அத்துடன் 4 ஏரிகளிலும் சேர்த்து 1.833 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைத்து வருகிறது.

புதிதாக நெம்மேலி அருகில் உள்ள பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 2 நிலையங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் ஓரளவு தண்ணீர் பிரச்சினை இருக்காது.

இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் ஏரிகளை நம்பியிருக்காமல், மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், தண்ணீர் வீராணம் ஏரிக்கும் வர இருக்கிறது. எனவே வீராணம் ஏரியில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வந்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

Next Story