விருகம்பாக்கத்தில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி
விருகம்பாக்கத்தில் தேசிய அளவிலான 3 நாள் நாணய கண்காட்சி நடைபெறுகிறது. இன்றுடன் கண்காட்சி நிறைவடைகிறது.
பூந்தமல்லி,
சென்னை நாணயவியல் கழகம் சார்பில், 2-ம் ஆண்டு தேசிய அளவிலான நாணய கண்காட்சி விருகம்பாக்கம் சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. 2-வது நாளான நேற்று ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டு இருந்த சங்க காலத்து நாணயங்களை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நாணயவியல் கழகத்தின் தலைவர் மணிகண்டன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர். இது குறித்து அவர்கள் இருவரும் கூறியதாவது:-
50-க்கும் மேற்பட்ட அரங்குகள்
ஆண்டு தோறும் 3 நாட்கள் நடைபெறும் இந்த நாணய கண்காட்சியின் 2-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், கலாசாரம் உள்ளிட்டவைகளை இன்றைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் சங்க கால நாணயங்கள், சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டபோது பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் கள், பிரெஞ்சுகாரர்கள் உபயோகப்படுத்திய நாணயங்கள், சங்க காலத்தில் அரசர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய கலை பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன.
வாங்கிச் சென்றனர்
இந்தியாவில் உள்ள அனைத்து நாணய சேகரிப்பு முகவர்களும் இதில் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள், இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகத்தில் கூட பார்க்க முடியாத நாணயங் களை இங்கு பார்க்கலாம்.
காலை 10 மணி முதல் இரவு 7மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பழைய நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் வந்து நாணய கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு வேண்டும் என்ற சங்க காலத்து நாணயங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
தபால் தலைகள்
இதில் தபால் தலைகளும் இடம்பெற்று உள்ளன. இளம் தலைமுறையினருக்கு தமிழ் கலாசாரம், இலக்கியம், பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவியாக உள்ளது.
கோவில் கோபுரம், கல்வெட்டு, ஓலைச்சுவடி வைத்துதான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும் என்பது இல்லை. இதுபோன்ற சங்க காலத்து நாணயங்களை வைத்தும் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story