பொன்னேரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்


பொன்னேரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 22 July 2018 4:06 AM IST (Updated: 22 July 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி பேரூராட்சியில் பிளாஸ்டிக்் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பொன்னேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்காட்சி நடத்தப்பட்டது.

இதனையடுத்து வாகனங்களில் துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் வியாபாரிகள் சங்கத்தினர் மகளிர் குழுக்கள் பொதுமக்கள் அடங்கிய கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது.

அதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. வியாபாரிகள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையை நிறுத்த முடியாது. ஏற்கனவே வாங்கி இருப்பு வைத்துள்ள பொருட்களை 3 மாதத்திற்குள் விற்பனை செய்ய கால அவகாசம் தேவை என வலியுறுத்தினர்.

மகளிர் குழுக்கள் தயாரிக்கும் துணிப்பை, பனை ஓலைப்பொருட்கள் வாழை மட்டை பொருட்கள் உள்ளிட்ட மக்கும் தன்மை கொண்ட பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்வதாக பெண்கள் உறுதி அளித்தனர்.

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார ஆய்வாளர் முகம்மது முஸ்தபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறினார்.

அவற்றுக்கு பதிலாக துணிப்பைகள், பாக்கு மட்டை பொருட்கள், காகித பொருட்கள் உபயோகப்படுத்த மக்கள் பழகி கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். கூட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் உபயோகப்படுத்த கூடாத பொருட்கள் குறித்தும், உபயோகப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நர்மதா தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் கடைகளில் துணிப்பை, வாழை பொருட்கள், பாக்கு மரப்பொருட்கள், பனை ஓலை பொருட்கள், தாமரை இலை உள்பட பல்வேறு மக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

இந்த பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிப்பதை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. பிளாஸ்டிக் இல்லா மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்தனர்.

சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஞானசுந்தரம், ஊராட்சி செயலாளர்கள் முனுசாமி, பரசுராமன், வெங்கடேசன், குமார், ஏழுமலை, முத்துக்குமார், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் வழங்கினார்.

Next Story