பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு லாரி கால்வாயில் கவிழ்ந்தது; டிரைவர், கிளீனர் பலி
புனே அருகே பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு லாரி கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனே,
புனே அருகே பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு லாரி கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர், கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரும்பு கம்பி லோடு
ஆந்திர மாநிலத்தில் இருந்து மும்பை அருகே உள்ள அலிபாக்கிற்கு லாரி ஒன்று இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த லாரி புனே அருகே உள்ள சிவாஜிநகர் பகுதியில் நேற்று மாலை 4.30 மணி அளவில் வந்துகொண்டிருந்தது. இந்தநிலையில் லாரி அங்குள்ள சங்கம் மேம்பாலத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கீழே உள்ள கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனர் படுகாயமடைந்தனர்.
2 பேர் பலி
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஏணி மூலம் கீழே சென்று லாரியில் இருந்த 2 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் டிரைவரும், கிளீனரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், விபத்தில் பலியான டிரைவர் கா்நாடகாவை சேர்ந்த சந்திரகாந்த் சிவாண்ணா(வயது31) என்பது மட்டும் தெரியவந்தது. பலியான கிளீனர் பெயர் விபரம் தெரியவில்லை.
இதற்கிடையே போலீசார் ராட்சத கிரேன் மூலம் கால்வாயில் கவிழ்ந்து கிடந்த லாரியை தூக்கும் பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக லாரியை மீட்கும் பணி நடந்ததால் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story