மின்சார ரெயிலில் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய போலீஸ்காரர்கள் முதுகை படிக்கட்டாக மாற்றி மீட்டனர்
மின்சார ரெயிலில் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தங்கள் முதுகுகளையே படிக்கட்டுகளாக்கி போலீஸ்காரர்கள் உதவினார்கள்.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. உரிய அறிவிப்புகள் கிடைக்கும் வரை ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் பூங்கா - கோட்டை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரெயிலில் இருந்து அமுதா என்ற கர்ப்பிணி பெண் இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸ்காரர்கள் ரெயிலில் தவித்துக்கொண்டிருந்த அமுதாவை அணுகினர். அப்போது அவர்களிடம், ‘நான் விரைவாக வீட்டுக்கு செல்லவேண்டும். என்னை எப்படியாவது இறக்கிவிடுங்கள். எனக்கு பயமாக உள்ளது’ என்று அமுதா கூறினார்.
இதையடுத்து போலீஸ்காரர்கள் தனசேகர் (எஸ்பிளனேடு), மணிகண்டன் (பூக்கடை) ஆகியோர் தங்கள் முதுகுகளையே படிக்கட்டுகளாக்கி குனிந்து நின்றனர். போலீசாருடன் ‘தந்தி’ டி.வி. நிருபர் எஸ்.மகேசும் சேர்ந்துகொண்டார். அவர்கள் முதுகின் மீது ஏறி அமுதா பத்திரமாக ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.
இதையடுத்து ரெயிலில் தவித்த வயதானவர்கள் சிலரையும் போலீஸ்காரர்கள் தனசேகர், மணிகண்டன் பத்திரமாக கீழே இறக்கினார்கள். அவர்களை அங்கிருந்த பயணிகள் அனைவரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story