மூன்றாம் பாலின நீதிபதி


மூன்றாம் பாலின நீதிபதி
x
தினத்தந்தி 22 July 2018 12:58 PM IST (Updated: 22 July 2018 12:58 PM IST)
t-max-icont-min-icon

சுவாதி பிதான் பாருவா, அசாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.

சுவாதி பிதான் பாருவா லோக் அதாலத் அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி குழுவில் இடம்பிடித்திருக்கிறார். குடும்ப நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க இருக்கிறார்.

திருநங்கைகளின் உரிமைக்காக நீண்ட காலமாக போராடி வருகிறார், சுவாதி. 2012-ம் ஆண்டு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு அவருடைய குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவருடைய விருப்பப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

2014-ம் ஆண்டு திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்று கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தும்படி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. திருநங்கைகள் நலனுக்காக தொடர்ந்து போராட உறுதி கொண்டிருப்பதாக சுவாதி கூறுகிறார்.

‘‘திருநங்கைகளான நாங்கள் அடிக்கடி பொதுமக்களின் ஏளனத்திற்கு உள்ளாகிறோம். நாங்களும் மற்ற மனிதர்களை போன்றவர்கள்தான். லோக் அதாலத் நீதிபதியாக என் பணி நியமனம் எங்கள் சமுதாயத்திற்கான மிக சாதகமான அம்சமாகும். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் உதவும்’’ என்கிறார்.

சுவாதி, நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். மேற்குவங்காளத்தை சேர்ந்த ஜோயிதா மோந்தல் என்பவர் முதல் திருநங்கை என்ற சிறப்பை கடந்த ஆண்டு பெற்றார். அவரைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள லோக் அதாலத் நீதிபதியாக வித்யா காம்ளே, கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story