மாதவரம் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜைன மத தலைமை குருவிடம் கவர்னர் ஆசி பெற்றார்


மாதவரம் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜைன மத தலைமை குருவிடம் கவர்னர் ஆசி பெற்றார்
x
தினத்தந்தி 23 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் விரதம் மேற்கொள்ளும் ஜைன மத தலைமை குருவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று ஆசி பெற்றார்.

சென்னை,

போதை ஒழிப்பு, நன்னெறி, நல்லொழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஜைன மதத்தின் தலைமை குரு ஆச்சார்யா மஹாஸ்ரமண் நாடு முழுவதும் அகிம்சை நெடும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அவர் சென்னை மாதவரத்தில் உள்ள ஆசிரமத்தில் ‘சதுர்மாஸ்’ என்ற 4 மாத கால விரதத்தை நேற்றுமுன்தினம் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்தநிலையில் விரதத்தை தொடங்கி உள்ள ஆச்சார்யா மஹாஸ்ரமணை தமிழக மக்கள் சார்பில் வரவேற்று கவுரவிக்கும் நிகழ்ச்சி மாதவரம் ஆசிரமத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்தியில் உரையாற்றி பேசியதாவது:–

நான் அசாம் மாநில கவர்னராக இருந்த போது, அங்கு ஆச்சார்யா மஹாஸ்ரமண் பங்கேற்ற அறநெறி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது அவருடன் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டேன். தற்போது நான் தமிழகம் கவர்னராக வந்த இடத்தில் மீண்டும் ஆச்சார்யா மஹாஸ்ரமணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை என்னுடைய பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஆச்சார்யா மஹாஸ்ரமண் அருளாசி வழங்கி பேசும்போது, ‘தமிழக மக்கள் இனிமையானவர்கள். அமைதி மாநிலமாக தமிழகம் இருக்கிறது. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் நன்னெறி யிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும்.’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, தமிழ்நாடு அணுவிரத கமிட்டி தலைவர் மாலா கத்ரேலா மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

Next Story