பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 July 2018 4:00 AM IST (Updated: 22 July 2018 11:42 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் காஞ்சீபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியதாவது:-

ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நாம் அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமின்றி சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி கழிவுநீர்் கால்வாய் அடைப்பு ஏற்படுவதுடன் நீர் நிலைகள் மாசு அடைகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, கடைகளில் வினியோகிக்கவோ, விற்கவோ கூடாது.

அனைத்து வகை நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக கடைகளுக்கு முறையாக அறிவிப்பினை வழங்கியும் மற்றும் தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் தொடர்ந்து கண்காணித்தும், ஆய்வு மேற்கொண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி பைகள், சணல் பைகள் மற்றும் காகிதத்தாலான பைகளை பயன்படுத்த அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பொது இடங்கள், கோவில்கள், வணிகப்பகுதிகள், நீர்் நிலைகள், தனியார் அலுவலகங்கள் மற்றும் பிற பகுதிகளில் தற்போது உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் அகற்றுவதுடன், மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் அற்ற நிலையை உருவாக்க வேண்டும்.

எனவே ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்கு பிறகு விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகம்மது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story