10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டக்கூடாது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி


10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டக்கூடாது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 23 July 2018 3:15 AM IST (Updated: 23 July 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகமது முபாரக் கூறினார்.

கோவை,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுக்கூட்டம் கோவை உக்கடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய பொதுச்செயலாளர் முகமது அலிஜின்னா பேசினார். கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகமது முபாரக் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாநில பொருளாளர் அபுதாகீர், தெற்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், பொதுச்செயலாளர் ராஜா உசேன், பொருளாளர் செய்யதப்பா, செய்தி தொடர்பாளர் மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகமது முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது. அதை தொடர்ந்து 4 கட்டங்களாக சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சிறுபான்மை சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை ஒரு முஸ்லிம் கைதிகள் கூட விடுதலை செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எனவே கைதிகளை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டக்கூடாது. இதற்கு முன்பு முதல்–அமைச்சரே நேரடியாக கைதிகளை விடுதலை செய்வதற்காக உத்தரவிட்டார். ஆனால் இந்த முறை கவர்னர்தான் இறுதி முடிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக சில முஸ்லிம் அமைப்பை சேர்ந்த இளைஞர்களை வேட்டையாடுவதற்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்து வருகிறார்கள். சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story