அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் நீண்டகால கனவுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, அமைச்சர் மணிகண்டன் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் நீண்டகால கனவுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, அமைச்சர் மணிகண்டன் பேச்சு
x
தினத்தந்தி 23 July 2018 4:15 AM IST (Updated: 23 July 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியில் மக்களின் நீண்டகால கனவுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் வேதாளை கிராமத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிராம ஊராட்சி அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் மணிகண்டன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் விதமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஊரகப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி அளவிலான தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ஒரு ஊராட்சிக்கு தலா ரூ.20,000 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இளைஞர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்துகொண்டு நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இதுதவிர வேதாளை பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் நலனுக்காக இப்பகுதிகளில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மாவட்ட மக்களுக்காக சட்டக்கல்லூரி பெற்று பெருங்குளத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, கலை அறிவியல் கல்லூரி, மருத்துவ கல்லூரியும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு செய்யக்கூடிய பணிகள் உன்னதமான பணிகளாக இருக்க வேண்டும். ஊழல் இல்லாத பணிகளை செய்ய வேண்டும். 5 ஆண்டு காலம் முடிந்து நான் மக்களை சந்திக்கும்போது அவர்களிடம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட அரசு திட்டங்களையும், செய்துள்ள பணிகளையும் தெரிவித்து வாக்குகேட்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிராங்க் பால் ஜெயசீலன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சருடன் ராமநாதபுரம் முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் தர்வேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, தாலுகா வீட்டு வசதி சங்க தலைவர் மருதுபாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சாமிநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ், நகர் இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், பெருங்குளம் ஊராட்சி செயலர் ஜானகிராமன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், அரசு வக்கீல் கருணாகரன், நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை துணை தலைவர் முத்துப்பாண்டி, ஆதில் அமீன், பாலசுப்பிரமணியன், ஒன்றிய அவை தலைவர் ஆறுமுகம், மண்டபம் நகர் செயலாளர் சீமான் மரைக்காயர் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவுக்கு வந்த அமைச்சரை பள்ளி தலைமை ஆசிரியர் உச்சிப்புளி (பொறுப்பு) நம்புராஜன், புதுநகரம் ஜமாத் தலைவர் சிராஜ்தீன், என்மனங்கொண்டான் புலவர் சித்திக், கார்மேகம், சாத்தையா உள்பட பலரும், இருமேனியில் தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் உம்முசல்மா பீவி, நிஜாமுதீன், மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலரும் வரவேற்றனர்.

Next Story