100 நாள் வேலைதிட்டத்தில் நீர்வள மேம்பாட்டு பணிகள் கலெக்டர் தகவல்
100 நாள் வேலை திட்டத்தில் நீர்வள மேம்பாட்டுப்பணிகள் மற்றும் தனிநபர், விவசாயிகளுக்கு பயனாளிக்கும் பணிகள் நடந்து வருவதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
100 நாள் வேலை திட்டம் கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–100 நாள் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் இயற்கை வளமேலாண்மையை மேம்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கிடும் வகையிலும் தனிநபர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாவட்டத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகள், பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளி தலைமையிலான குடும்பங்கள், பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம்(ஊரகம்) பயனாளிகளுக்கு முன்னுரிமையுடன் செயல்படுத்தப்படுகிறது.
விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்தல், ஊரகப் பகுதிகளில், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும், குடியிருப்புப் பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்திடவும், கைப்பம்பு, தெருக்குழாய், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளைச் சுற்றியும் உறிஞ்சு குழி அமைக்கப்படுகிறது.
தனிநபர் மற்றும் சமுதாய திறந்தவெளி கிணறு தனிநபர் தோட்டத்தில் எருக்குழி, உரக்குழி அமைத்தல், விவசாய நிலங்களில் கல் வரப்புகள், மண் வரப்புகள் அமைத்தல்
மேலும் மலைப்பகுதி, சாய்வுதள நிலப்பகுதிகளில் நீர்ப்பிடிப்பு, பள்ளங்கள், குழிகள் அமைத்தல்
ஆடு, மாடு, கோழி கொட்டகை அமைத்தல்,தனிநபர் விவசாய நிலங்களில் பலன் தரும் மரக்கன்றுகள் நடுதல், தடுப்பணைகள் கட்டப்படுகிறது.நிலத்தடி நீரை மேம்படுத்தவும், மழைநீரை நிலத்தடியில் சேகரிக்கவும், மழை நீர் வழியும் ஓடைகளில் செறிவூட்டும் குழிகள் அமைக்கப்படுகிறது.
பெருமளவு மரக்கன்றுகள் மற்றும் சாலையின் ஓரங்களில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
.இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற அருகிலுள்ள ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அணுகலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.