அருப்புக்கோட்டையில் 35 சாயப்பட்டறைகளின் மின் இணைப்ப்டு துண்டிப்பு
அருப்புக்கோட்டையில் திடீரென 35 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் பெரிய புளியம்பட்டி, திருநகரம், வெள்ளைகோட்டை, சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் பல தலைமுறைகளாக கைத்தறி நெசவு தொழில் செய்து வந்தனர். நாளடைவில் கைத்தறி தொழில் நலிவடைந்ததால் படிப்படியாக விசைத்தறிக்கு மாறினர்.
நெசவாளர்கள் சேலை உற்பத்திக்கு தேவையான நூல் ரகங்களை அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள நூற்பாலைகளில் வாங்கி சாயம் போட்டு சேலைகள் தயாரித்து வந்தனர். அருப்புக்கோட்டையில் தயாரிக்கப்பட்ட சேலைகள் தமிழ்நாடு ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கண்மாயில் கலப்பதால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு வந்த புகாரை அடுத்து நேற்று முன்தினம் இரவு 35 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
திடீரென்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நெசவாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறிய ஆலை உரிமையாளர் சங்க பொருளாளர் ஆறுமுகம் கூறியதாவது:–
நாங்கள் பயன்படுத்தும் சாயப்பவுடர் வீரியம் குறைவானது. ஆதனால் தான் எங்களது கைகளாலேயே இப்பணிகளை செய்து வருகிறோம். எங்களது சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதனை சில வருடங்களுக்கு முன்பு நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வுகூட்டத்தில் எங்களது நெசவாளர்கள் செயல்முறை விளக்கம் அளித்து காட்டினார்கள். அதிகாரிகளும் பரிசோதித்து சாயக்கழிவுகளால் பாதிப்பு இல்லை என கூறி கூட்டத்தில் கலந்து கொண்ட சாய பட்டறை உரிமையாளர்கள் 35 பேரிடம் கையொப்பமிட்டு எழுதி வாங்கினர்.
மேலும் புதிதாக யாரும் சாயப்பட்டறை திறக்க கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். சங்கத்தின் மூலம் சாயப்பட்டறைகளை ஊருக்கு தொலைவில் ஓரிடத்தில் அமைத்து பணிகளை மேற்கொள்ள கூறினர். நாங்களும் அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து சங்கத்தின் மூலம் வாங்கினோம். நாங்கள் வாங்கிய பகுதியில் நிலத்தடி நீர் அதிகமான உவர்ப்பு தன்மை கொண்டதாக இருந்தது. இதன் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை வைத்து எங்களது சாயப்பட்டறைகளை இயக்க முடியாது என்பதால் பந்தல்குடி பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்ய சென்ற போது அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து அதுவும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வந்த மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட 35 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை எந்த வித முன்னறிவிப்பின்றி துண்டித்து உள்ளனர். இதனால் தொழிலாளர்கள், நெசவாளர்கள், அவரை சார்ந்த குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. அரசுக்கு கட்டுப்பட்டு தான் இத்தொழிலை செய்து வருகிறோம். எங்களின்
நிலை அறிந்து வாழ்வாதாரம் காக்க அரசே ஓர் இடத்தை தேர்வு செய்து சாயப்பட்டறைகளை நடத்த வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு கூறினார்.