கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்: வடமாநில தொழிலாளர்களை கடத்தியதால் பரபரப்பு
கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் என கூறி வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சிறைவைத்தனர்.
கூடலூர்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த மேப்பாடி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் 20–ந்தேதி பணி முடிந்து வீடுகளுக்கு சென்றனர். அப்போது ஒரு பெண் உள்பட 5 பேர் கையில் துப்பாக்கிகளுடன் அந்த வழியாக வந்தனர். பின்னர் தாங்கள் மாவோயிஸ்டுகள் என கூறி வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சிறைவைத்தனர். பின்னர் அன்று இரவே அவர்களை விடுவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அந்த தொழிலாளர்கள் போலீசாரிடம் கூறுகையில், மேப்பாடி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடியாக நுழைந்து அரிசி, பருப்பு, காய்கறிகளை அள்ளி செல்வதற்காக மாவோயிஸ்டுகள் வந்தனர். வந்த சமயத்தில் எதிரே நாங்கள் வந்ததால் எங்களை கடத்திய அவர்கள் அன்று இரவே விடுவித்தனர் என்றனர்.
பின்னர் தேடப்படும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் காண்பித்தனர். அப்போது விக்ரம் கவுடா, சோமன், சந்தோஷ், மாயா என 4 மாவோயிஸ்டுகள் என அடையாளம் தெரிந்தது. ஆனால் பெண் மாவோயிஸ்டு பற்றிய தகவல் தெரியவில்லை.
இதனிடையே மேப்பாடி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 5 பேர் தீ மூட்டி சமைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிராம மக்களை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. விசாரணையில் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று தெரியவந்தது. இதையடுத்து கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.