தனுஷ்கோடி கடற்கரையில் மிதவை கரை ஒதுங்கியது
தனுஷ்கோடி கடற்கரையில் சேதமடைந்த நிலையில் கப்பலில் பயன்படுத்தும் மிதவை கரை ஒதுங்கியது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி கடற்கரை. இந்நிலையில் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் மற்றும் கம்பிப்பாடுக்கும் இடைப் பட்ட கடற்கரை பகுதியில் நேற்று கயிறுடன் மிதவை (போயா) ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீசார் அங்கு சென்று மிதவையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கரை ஒதுங்கிஉள்ள இந்த மிதவை தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு சென்ற ஏதேனும் பெரிய கப்பல்களில் இருந்து கயிறு அறுந்து கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்திய கடலோர காவல்படை அல்லது இலங்கை கடற்படை கப்பலின் மிதவையா அல்லது வேறு ஏதேனும் தனியார் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மிதவையா என்பது குறித்தும் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மிதவை கப்பல் துறைமுகத்தில் நங்கூரம் இட்டு நிறுத்தி இருக்கும்போது கப்பலின் பக்கவாட்டு பகுதிகள் துறைமுக தளத்தில் உரசி சேதமாகாமல் இருக்க மிதக்கவிடப்படுவதாகும்.