‘தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி நடக்கிறது’ - ஆ.ராசா குற்றச்சாட்டு


‘தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி நடக்கிறது’ - ஆ.ராசா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 July 2018 5:00 AM IST (Updated: 23 July 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தெரிவித்தார்.

காரைக்குடி,

காரைக்குடி பாண்டியன் திடலில் 21–ம் ஆண்டு கலைஞர் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச்சங்க புலவர் தொழில் அதிபர் படிக்காசு முன்னிலை வகித்தார். சங்க நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான தென்னவன் வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ரகுபதி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராஜா, நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆ.ராசா தனது சிறப்புரையில் கூறியதாவது:–

தி.மு.க. தலைவர் கலைஞரின் அரசியலோடு இலக்கியமும் எப்போதும் இணைந்தே இருக்கும். தந்தை பெரியார், கலைஞரின் இலக்கிய ஆற்றலை கண்டு வியந்து பாராட்டியுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டுகாலமாக தனது ஆளுமையை நிலை நாட்டி வருபவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்பட பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர். இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் நிறைவேற்ற தயங்கிய சட்டங்களை துணிச்சலாக நிறைவேற்றியவர் கருணாநிதி.

தற்போதுள்ள மாநில அரசு ஊழலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், குட்கா ஊழல், சமீபத்தில் ஆளுவோருக்கு வேண்டியவர்களான காண்டிராக்டர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவற்றின் மீது எடுக்காதது ஏன். மத்தியில் மதவெறி கொண்ட ஆட்சியும், மாநிலத்தில் மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காத ஆட்சியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் விழாவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார். இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், நகர அவைத்தலைவர் ராகோ அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுப.சின்னத்துரை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story