பாரதமாதா கோவில் கட்டும் பணியை அரசு உடனே தொடங்க வேண்டும் குமரி அனந்தன் பேச்சு


பாரதமாதா கோவில் கட்டும் பணியை அரசு உடனே தொடங்க வேண்டும் குமரி அனந்தன் பேச்சு
x
தினத்தந்தி 23 July 2018 4:30 AM IST (Updated: 23 July 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் கட்டும் பணியை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த பாராட்டு விழாவில் குமரி அனந்தன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி பாரதமாதா ஆன்மிக சேவை மையத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் கட்ட உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு பாராட்டு விழா மற்றும் பாரதமாதா கோவில் கட்ட பல்வேறு அறப்போராட்டங்களை நடத்திய குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பாரதமாதா ஆன்மிக சேவை மைய தலைவர் குருராவ் தலைமை தாங்கினார். அகில பாரதிய துறவியர் சங்க செயலாளர் ராமானந்தர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் தகடூர் வேணுகோபால் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி.சிற்றரசு, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் டி.என்.சி.இளங்கோவன், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி தலைவர் வடிவேலன், தர்மபுரி மாவட்ட கம்பன் கழக இலக்கிய அணி செயலாளர் அறிவொளி, கவிஞர் கண்ணதாசன் நற்பணி மன்ற இலக்கிய அணி செயலாளர் தமிழ்தாசன், ஆசிரியர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் பேசியதாவது:-

பிராமண சமூகத்தில் பிறந்த சுப்பிரமணியசிவா நூறு ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மத பேதங்களை கடந்து அனைவரும் சமம் என்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பியவர். சாதி கொடுமைகளை கடுமையாக எதிர்த்த அவர் சாதி, மத ஏற்றத்தாழ்வுகளின்றி அனைவரும் கருவறை வரை சென்று வழிபாடு நடத்தும் வகையில் பாரதமாதா கோவிலை உருவாக்க எண்ணியது எவ்வளவு பெரிய புரட்சி என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். சுதந்திர போராட்டத்தின்போது பல்வேறு கொடுமைகளை சந்தித்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது தொழுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நடந்தே சென்று நிதி திரட்டி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவிலை கட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.

நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் குருவான சித்தரஞ்சன்தாசை பாப்பாரப்பட்டிக்கு அழைத்து வந்து அதற்கு அடிக்கல் நாட்டினார். சுப்பிரமணிய சிவாவின் சமத்துவ சிந்தனையால் ஈர்க்கப்பட்ட காமராஜரின் தொண்டனான நான் 1977-ம் ஆண்டு முதல் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக நடைபயணங்கள், உண்ணாவிரதம் என பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினேன். இந்த அறப்போராட்டத்தில் உயிரிழந்தால் பாப்பாரப்பட்டியில் எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

இந்த நிலையில் பாரதமாதா கோவிலை கட்ட தமிழக அரசு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்- அமைச்சருக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர், செய்திமக்கள் தொடர்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாரதமாதா கோவிலை சுப்பிரமணிய சிவாவின் விருப்பப்படி சமத்துவ பொதுக்கோவிலாக கட்ட வேண்டும். தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமான பணியை உடனே அரசு தொடங்க வேண்டும்.

இவ்வாறு குமரி அனந்தன் பேசினார். 

Next Story