பஸ் - கார் மோதி தீப்பிடித்து எரிந்தன: 2 பேர் உடல் கருகி பரிதாப சாவு


பஸ் - கார் மோதி தீப்பிடித்து எரிந்தன: 2 பேர் உடல் கருகி பரிதாப சாவு
x
தினத்தந்தி 23 July 2018 4:45 AM IST (Updated: 23 July 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

அத்திப்பள்ளி அருகே பஸ்சும், காரும் மோதி தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓசூரை சேர்ந்த 2 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

ஓசூர்,

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் அத்திப்பள்ளியை அடுத்த சந்தாபுரம் பக்கமாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி கார் ஒன்று வந்தது.

அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பிகளை உடைத்து ஆம்னி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அந்த நேரம் பஸ்சில் இருந்த 10 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கண்ணாடிகளை உடைத்து பஸ்சில் இருந்து வெளியே குதித்து உயிர் பிழைத்தனர். அதே நேரத்தில் காரில் பயணம் செய்த 2 பேரும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதில் 2 பேரும் தீயில் கருகி பரிதாபமாக பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி, சர்ஜாபுரம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதில் பஸ்சும், காரும் முழுமையாக எரிந்தன. மேலும் காருக்குள் 2 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூர்யாசிட்டி போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த நூர் என்பவரின் மகன் ஷபி (வயது 29) மற்றும் ஓசூர் இமாம்பாடாவை சேர்ந்த ரிஸ்வான் என்பவரின் மகன் இஸ்மாயில் (28) என தெரிய வந்தது. இவர்களில் ஷபி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவருக்கு குழந்தை பிறந்து 4 நாட்களே ஆகிறது.

அதே போல இஸ்மாயில் மெக்கானிக் ஆவார். இறந்த 2 பேரும் நண்பர்கள். தொழில் விஷயமாக அவர்கள் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சென்று விட்டு நேற்று அதிகாலை ஓசூர் திரும்பிய போது விபத்தில் சிக்கி பலியானது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story